மக்களின் வாழ்க்கையை நாசமாக்குவதே ரணிலின் திட்டம்: அநுர குற்றச்சாட்டு!
மக்களின் வாழ்க்கையை நாசமாக்க வேண்டும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சதித் திட்டம் என ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (15.03.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "ஜனாதிபதி பதவி என்பது ரணிலுக்குப் பரம்பரை பரம்பரையாக உரித்தான சொத்து என்று நினைக்கின்றார். அது மக்களின் ஆணையின் ஊடாகக் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர் இல்லை. 1977இல் இருந்து 2020ஆம் ஆண்டு வரை மக்கள் அவருக்கு அரசியல் ஆணை வழங்கினர். அதன் பின் மக்கள் அவரை விரட்டினர்.
ரணிலின் சதித் திட்டம்
அவரை மக்கள் இவ்வாறு விரட்டுவார்கள் என்று அவர் ஒருபோதும் நினைக்கவில்லை. இதனால் அவருக்கு மக்கள் மீது குறிப்பாகக் கொழும்பு மக்கள் மீது கடும் கோபம் உண்டு.
அந்தக் கோபத்தை அவர் பல வழிகளில் தற்போது வெளிக்காட்டி வருகின்றார். சம்பளத்தில் அறைவாசியை அரசு வரி என்ற பெயரில் பறித்துக்கொள்கின்றது. மக்களின் வாழ்க்கையை நாசமாக்க வேண்டும் என்பதே ரணிலின் சதித் திட்டம். க. பொ. த உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகும் போதே மின்வெட்டை நிறுத்துமாறு மக்கள் அரசிடம் கேட்டனர்.
ஆனால், அரசு மறுத்துவிட்டது. பின்னர் பெப்ரவரி 16 ஆம் திகதி மின் கட்டணத்தை அதிகரித்து மின்வெட்டை மறுநாள் 17ஆம் திகதி நிறுத்தியது அரசு. இதனூடாகவும் மக்களை ரணில் பழிவாங்கினார்.
பெப்ரவரி 17 ஆம் திகதிதான் உயர்தரப் பரீட்சை முடிவடைந்தது. அன்றைய தினம்தான் அரசு மின்வெட்டை நிறுத்தியது. பாடசாலை மாணவர்களை ரணில் எப்படிப் பழிவாங்கினார் என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகின்றது.
Post a Comment