இலங்கையின் இராணுவ அதிகாரிக்கு ஐக்கிய நாடுகள் அமர்வில் வலுக்கும் எதிர்ப்பு!
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவின் 6வது கால மீளாய்வின் போது இலங்கையின் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் குலதுங்கவின் பிரசன்னத்துக்கு எதிராக தொடர்ந்தும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த பிரசன்னத்தை கேள்விக்குட்படுத்துமாறு வலியுறுத்துமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவிற்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான Elliot Colburn கடிதம் எழுதியுள்ளார்.
மேஜர் ஜெனரல் குலதுங்க, 2016, நவம்பர் 7 முதல் 2017 ஜூலை 27 வரை, வவுனியா ஜோசப் முகாமின் தளபதியாக இருந்தார், அந்த முகாமில், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் பற்றிய தொடர்ச்சியான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்று கோல்பர்ன் தெரிவித்துள்ளார்.
எனவே ஐக்கிய நாடுகளின் கூட்டங்களில் மனித உரிமைகள் குற்றவாளிகள் எனப்படுவோர் கவனிக்கப்படாமல் இருக்கமுடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் ஜோசப் முகாமில் சித்திரவதைக்கு ஆளான பலர் பிரித்தானியாவில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் அமர்வில், இலங்கையின் பிரதிநிதியாக குலதுங்கவை இணைத்தமை, சித்திரவதைக்கு உள்ளானவர்கள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கோல்பர்ன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் சிசிர மெண்டிஸ் 2016 இல் சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் குழுவில் விசாரிக்கப்பட்டதைப் போன்றே, ஜோசப் முகாமில் பங்கு குறித்து குலதுங்கவிடம் ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று எலியோட் கோல்பேர்ன் (Elliot Colburn) வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment