உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுவதில் மீண்டும் சிக்கல்! அமைச்சர் பகிரங்கம்
எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுவது நிச்சயமற்றது என ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார (K. W. Shantha Bandara) தெரிவித்துள்ளார்.
அரசின் நிதி ஒதுக்கீடு முன்னிலை பட்டியலில் தேர்தல் நடவடிக்கைகள் உள்வாங்கப்படவில்லை எனவே தேர்தல் இடம்பெறுவது நிச்சயமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், 300 மில்லியன் ரூபாவை முற்பணமாக வழங்கினால் வாக்குச்சீட்டுக்களை அச்சிட முடியும் என்று தெரிவித்தார்.
அரச அச்சகத் திணைக்களம் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் விடயதானத்திற்குள் உள்ளது எனவும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளுக்கு மாத்திரம் 150 மில்லியன் ரூபா செலவாகியுள்ள நிலையில், திறைசேரி 40 மில்லியன் ரூபாவை இதுவரை வழங்கியுள்ளது என்றும் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
நிதி மற்றும் போதிய பாதுகாப்பு வழங்கினால் வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளை தொடர முடியும் என அரச அச்சகத் திணைக்கள தலைவர் திறைசேரிக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் அறிவித்துள்ள நிலையில், போதிய பாதுகாப்பு வழங்க தயார் என பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நிதி விடுப்பு தொடர்பில் திறைசேரி சாதகமான பதிலை அறிவிக்கவில்லை என்றும் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
Post a Comment