என்னை 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க இராணுவம் திட்டம் – இம்ரான் கான்
அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது. வருகிற 17ம் திகதி வரை வேறு எந்த வழக்கிலும் இம்ரான் கானை கைது செய்யக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. பிணை கிடைத்ததையொட்டி இம்ரான் கான் லாஹூரில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பினார்.
பின்னர் அவர் நேற்று இரவு தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் அரசுக்கு எதிராக இம்ரான் கான் பரபரப்பான குற்றச்சாட்டினை தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது;
“.. தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் அடுத்த 10 ஆண்டுகளில் என்னை சிறையில் அடைக்க பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த இராணுவம் திட்டமிட்டு உள்ளது. முதலில் வேண்டுமென்றே என் கட்சிக்காரர்கள் மீது பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளது. சாதாரண மக்கள் மற்றும் ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. நாளை என்னை கைது செய்ய வரும் போது மக்கள் வெளியே வரமாட்டார்கள் என்ற பயத்தை உருவாக்குவதற்காக இது திட்டமிட்ட முயற்சி. நாளை மீண்டும் இணையதள சேவைகளை நிறுத்தி சமூக ஊடகங்களை தடை செய்வார்கள். பாகிஸ்தான் மக்களுக்காக நான் சொல்வது என்னவென்றால் எனது கடைசி துளி இரத்தம் இருக்கும் வரை நான் உண்மையான சுதந்திரத்துக்காக போராடுவேன். அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் தலைவணங்க மாட்டோம் என உறுதி எடுத்துக் கொண்டோம் என்பதை நினைவில் கொள்ளுமாறு எனது மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்..” எனத் தெரிவித்துள்ளார்.
Post a Comment