சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க கடும் சட்டங்கள்
சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு கடுமையான சட்டங்களை உருவாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சில ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் கைகளில் நடைபெற்று வரும் சிறுவர் துஷ்பிரயோகங்களை விரைவாக ஒடுக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறான செயல்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்ட அமைப்பு ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
களுத்துறை ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியில் இருந்து குதித்து 16 வயது மாணவி விழுந்து உயிரிழந்த சம்பவம், களுத்துறை மாலை வகுப்பு ஆசிரியை ஒருவரால் 16 சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை போன்ற சம்பவங்கள் தொடர்வதாக தொடர்ந்தும் வெளியாகும் சம்பவங்கள் தொடர்பிலேயே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
நாட்டின் குழந்தைகளை பாதுகாப்பதற்கு தனியான சட்டமொன்றை கொண்டு வர வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். அதற்காக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த சட்ட அமைப்பை தயாரிப்பதில் கையடக்கத்தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் போன்றவற்றை பாவித்து சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அறிவித்துள்ளார்.
அதன்படி, உரிய சட்டங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் அவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.
பாடசாலை பாடத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வீட்டில் பெற்றோர்-குழந்தை உறவுகள் மற்றும் மனநலம் தொடர்பான புதிய உரையாடல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
குழந்தைகளின் மனநிலையை புரிந்து கொண்டு பரந்த மனப்பான்மை கொண்ட பிள்ளையை உருவாக்கும் வகையில் சமூகத்தின் மனப்பான்மையை வளர்க்கும் வகையில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டத்தில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Post a Comment