முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பாக 27 முஸ்லிம் சிவில் அமைப்புகள் கையொப்பமிட்ட அறிக்கை நீதியமைச்சரிடம் கையளிப்பு.




2023.08.29 ஆம் திகதி குறித்த அறிக்கை நீதி அமைச்சில் கௌரவ நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. 


27 முஸ்லிம் சிவில் அமைப்புகள் கையொப்பமிட்டு நீதி அமைச்சருக்கு கையளித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் பின்வருமாறு;


1951ம் ஆண்டின் 13ம் இலக்க முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்கின்ற போது பின்பட்டப்பட வேண்டிய பரிந்துரைகளாக பின்வரும் பரிந்துரைகள் முஸ்லிம் சிவில் அமைப்புகளால் ஏகமனதாக உடன்பாடு காணப்பட்டுள்ளன.


1)   பிரதான சட்டத்தின் தலைப்பிலிருந்து 'Muslim' என்ற சொல் நீக்கப்பட்டு 'persons professing Islam' என்ற சொற்பிரயோகம் உள்வாங்கப்படக் கூடாது.


2)   பிரதான சட்டத்தில் பிரயோகிக்கப்பட்டுள்ள ‘Nikah ceremony’ என்ற சொற்பிரயோகமானது 'Solemnization' என்ற சொற்பிரயோகத்தினால் மீளமைக்கப்படக் கூடாது. 


3)   பிரதான சட்டத்தின் பிரிவு 16 நீக்கப்படாமல் அவ்வாறே தொடர்ந்துமிருத்தல் வேண்டும் 


4)   மணமகள் தன்னுடைய சம்மதத்தை வெளிப்படையாகத் தெரிவிப்பதற்காக திருமணப் பதிவு ஆவணத்தில் கையொப்பமிட வேண்டும். ஆனால் இந்த ஏற்பாடானது திருமண ஒப்பந்தத்தின் கட்டாயமான தேவைபாடான, திருமண ஒப்பந்ததாரர்களில் ஒருவரான வலியினுடைய கையொப்பம் என்ற தேவைபாட்டினை இல்லாமலாக்க கூடாது.


5)   திருமணப் பதிவானது கட்டாயமாக்கப்பட வேண்டும் பதியப்படவில்லை என்ற காரணத்திற்காக இஸ்லாமியத் திருமணம் ஒன்று வலிதற்றதாகாது.  ஆனால் திருமணப் பதிவானது செய்யத் தவறும் பட்ஷத்தில் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட வேண்டும். 


6)   பெண்களைத் திருமணப் பதிவாளர்களாக நியமிப்பதானது சமூகத்தில் அவர்கள் நீண்டகாலமாகப் பின்பற்றி வருகின்ற பாரம்பரியங்களில் சில நடைமுறை ரீதியான அசௌகரியங்களை ஏற்படுத்தும். எனவே பெண் திருமணப்பதிவாளர்களை நியமிப்பதை அனுமதிக்க முடியாது.


7)   காதிப் பதவிக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் காதிகள் சபையினால் பரிசீலிக்கப்பட்டு, பொருத்தமான விண்ணப்பதாரர்களை நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்படும்.  நீதிச்சேவை ஆணைக்குழுவானது அவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களுள் ஒரு முஸ்லிமான ஆணைக் காதியாக நியமிக்க வேண்டும். 

பலருடைய வேண்டுகோளுக்கு இணங்க காதிகளுக்கு உதவுவதற்கு என நியமிக்கப்படுகின்ற மூன்று உதவியாளர்களில் கட்டாயம் இரு பெண்கள் நியமிக்கப்பட வேண்டும். இது விவாகரத்து பராமரிப்பு போன்ற விடயங்களில் வெளிப்படைத் தன்மை பேணப்படுவதையும் பாரபட்சமற்ற தீர்ப்பினை பெற்றுக் கொடுப்பதையும் உத்தரவாதப்படுத்தும்


8)   ஆணுக்கும் பெண்ணுக்குமான ஆகக்குறைந்த திருமண வயதாக 18 வயது நிர்ணயம் செய்யப்படுகின்ற பொது அந்தக் குறித்த பிரிவிற்கு ஒரு விதிவிலக்கு வாசகம் அவசியம்.

9)   காதி முறைமையானது தரவிறக்கம் செய்யப்படக் கூடாது காதிகள் சபை காதி முறைமையில் இருந்து இல்லாமலாக்கப்படக் கூடாது. பிரதான சட்டத்தில் காதிகள் மற்றும் காதிகள் சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களும் கடமைகளும் அவ்வாறே தொடர்ந்தும் இருத்தல் வேண்டும். 

10) பலதாரமணமானது சட்டத்தினால் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்

o   பலதாரமணத்திற்கு காதி நீதிபதி வழங்குகின்ற அனுமதியினை அல்லது மறுப்பினை மேன்முறையீடு செய்கின்ற இடமாக காதிகள் சபை குறிப்பிடப்பட வேண்டும். (மாவட்ட நீதிமன்றம் அல்ல)  

o   பலதாரமணம் தொடர்பான குறித்த பிரிவுகளுக்கு மாற்றமாக திருமணம் ஒன்று நிகழுமானால் அது வலித்தற்றதாகக் கொள்ளப்படக் கூடாது. ஆனால் அவ்வாறான திருமணங்களைத் தடுக்கும் வகையில் தண்டனைகளை வகுக்க முடியும்.

o   பலதாரமண திருமணங்களுக்கு பின்வரும் நிபந்தனைகள் சேர்க்கப்பட வேண்டும்:

(a) விண்ணப்பதாரர் தற்போதைய மனைவி அல்லது மனைவிகளோடு வாழ்ந்து, நியாயமாகவும், போதுமானதாகவும் பராமரித்து, கவனித்துக்கொள்பவராதல் வேண்டும்.

(b) விண்ணப்பதாரர் தனது மனைவி அல்லது மனைவிக்குப் பிறந்த குழந்தைகளை நியாயமான மற்றும் சமமான முறையில் கவனித்துக்கொள்பவராதல் வேண்டும்

(c) விண்ணப்பதாரர் தனது மனைவி மற்றும் அவரது மற்ற மனைவி அல்லது மனைவிகளுடன் நீதியாகவும் சமமாகவும் கையாளும் திறன் கொண்டவராதல் வேண்டும்

(d) விண்ணப்பதாரர் தனது மனைவிகள் மற்றும் குழந்தைகளுக்கான அவரது மற்றும் அவளது சமூக நிலைப்பாட்டிற்கு ஏற்ப பொருத்தமான மற்றும் சுதந்திரமான வசிப்பிடத்தை வழங்கவும் பராமரிக்கவும்  நிதிவசதி கொண்டவராதல் வேண்டும் மற்றும்

(e) விண்ணப்பதாரர் அனைத்து மனைவிகளின் நிதி, உடல் மற்றும் உணர்ச்சி நலன் தொடர்பாக சமநிலையான வாழ்க்கையை வழங்குவதற்கான திறனைக் கொண்டவராதல் வேண்டும்

அல்லது

(f) தற்போதுள்ள மனைவி மற்றும்/அல்லது மனைவிகள் தன் தாம்பத்தியக் கடமைகளைச் செய்ய இயலவில்லை அல்லது உடல் நலக்குறைவு அல்லது தீராத நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் அல்லது குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியாதவராதல் வேண்டும்

இங்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளைத் தள்ளுபடி செய்யும் சுதந்திரம் தற்போதைய மனைவிக்கும் மற்றும்/அல்லது உத்தேசித்திருக்கும் மனைவிக்கும் உண்டு.

11) முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் 16 மற்றும் 98(2) பிரிவுகளில் உள்ள ‘விவாகரத்து’ என்ற வார்த்தையை நீக்கக் கூடாது.

12) பிரதான சட்டத்தின் 30வது பிரிவு அப்படியே நடைமுறையில் இருக்கும்படி பரிந்துரைக்கிறோம். எவ்வாறாயினும், இந்த நடைமுறை நிகழ்வதை ஊக்குவிக்காமல் இருப்பதற்காக, நீதிமன்றத்திற்கு வெளியே விவாகரத்து அறிவிப்பை உச்சரிப்பவருக்கு அபராதம் விதிக்கவும் பரிந்துரைக்கிறோம்.

13) பிரதான சட்டத்தில் காணப்படுகின்ற தலாக் மற்றும் faskh ஆகிய சொற்பதங்கள் நீக்கப்படக் கூடாது. குலா விவாகரத்து என்பது பிரிவு 28ல் வரையறுக்கப்பட்டு வெளிப்படையாக சேர்க்கப்பட வேண்டும்

14) மத்தா தொடர்பான பிரிவுகள் சட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும். மத்தாவைத் தீர்மானிக்கின்ற அதிகாரம் காதிக்கு வழங்கப்பட வேண்டும். அது தொடர்பான மேன்முறையீடு காதிகள் சபைக்குச் செய்யப்பட வேண்டும்.

15) பிரிவு 74 ஆனது முன்மொழியப்பட்டுள்ள திருத்தச் சட்டத்தில் நீக்கப்பட்டிருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

16) முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து ஆலோசனை சபை இல்லாமலாக்கப்படக் கூடாது. அது மேலும் வினைத்திறனாகச் செயற்படும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

17) காதி நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கானது விசாரிக்கப்படுவதற்கான கால வரையறை ஒரு வருடத்திற்கு மேற்படாதிருத்தல் வேண்டும்.


 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.