காலணிகளுக்கான வவுச்சர்கள் வழங்க 22 கோடி ரூபாய் செலவிடப்படும்
நாட்டில் மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 747,093 மாணவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிக்குகள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்கு 3,000 ரூபா பெறுமதியான காலணி வவுச்சர்களை வழங்க கல்வி அமைச்சு 2,200 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.
கல்வி அமைச்சின் பதிவு செய்யப்பட்ட கடைகளில் காலணிகளை பெற்றுக் கொள்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவிக்குமாறு மாகாண, பிராந்திய மற்றும் பிரதேச கல்வி அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான சுற்றறிக்கை கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் அதற்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் பிரிவேன் மாணவர்களுக்கு சீருடை, பாடப்புத்தகங்கள் மற்றும் காலணிகள் வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.நேற்று (04) இடம்பெற்ற வைபவத்தில் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் ஆண்டில் காலணி வழங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 10 இலட்சமாக அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், எமது நாடு மாத்திரமன்றி உலகின் பல நாடுகளும் அரசாங்கம் என்ற வகையில் பல சவால்களை எதிர்நோக்கி வருவதாகவும் வலியுறுத்தினார்.
பாடசாலை மாணவர்களுக்கு பாடப்புத்தகம், சீருடை, மதிய உணவு, காலணிகள் வழங்குவது குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்குவதாகவும், ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை நீக்குமாறு சில தரப்பினர் கோரிக்கை விடுத்து வருவதாகவும், அதனை தாம் பாராளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போதைய பொருளாதார நிலைமையைப் பார்க்கும்போது குழந்தைகளுக்கான முன்னுரிமைகளை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
டிசம்பர் 22 ஆம் திகதி பாடசாலை விடுமுறைக்கு பின்னர் அனைத்து பாடசாலைகளும் பெப்ரவரி 2 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் பொருளாதார சவால்கள் பல உள்ள போதிலும் இலங்கையில் மாணவர்களின் தொடர்ச்சியான மற்றும் சுறுசுறுப்பான வருகையை பேணுவதற்காக அரசாங்கம் கல்விக்கு முன்னுரிமை அளித்து வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment