இறுதிப்போட்டியின்_கதாநாயகன்
முன்னாள் வடமாகாண உதைபந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர், மன்னார் மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி அலுவலர், மற்றும் தற்போது இலங்கை தேசிய மகளீர் உதைபந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளருமான திருவாளர் J.R.M.ஜஸ்மின் அவர்கள்.
1970 ஆம் ஆண்டு இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் பிறந்த இவர் ஆரம்பம் முதல் தனது கல்வியை மன்னார் அல் அஸார் தேசிய பாடசாலையில் கற்றார்.
பாடசாலை காலம் முதலிருந்தே உதைபந்தாட்டதில் தன்னை ஈடுபடுத்திவந்த இவர் பாடசாலை உதைபந்தாட்ட அணியில் அணித்தலைவராக செயற்பட்டதுடன் மாவட்ட,மாகாண மற்றும் தேசிய ரீதியில் பாடசாலை மட்ட உதைபந்தாட்டப் போட்டிகளில் பல பல வெற்றிகளை பெற்றதுடன் மாவட்ட, மாகான சிரேஷ்ட தெரிவு அணிகளிலும் இடம்பிடித்து பல போட்டிகளில் பங்குபற்றியுமுள்ளார்.
2000-2013 ஆண்டுவரை மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய இவர் 2001-2006 வரையான காலப்பகுதிகளில் வடகுழக்குமாகாண உதைபந்தாட்ட அணியின் உதவிப் பயிற்றுநராகவும் கடமையாற்றியுள்ளார்.
2007-2013 ஆண்டுவரையான காலப்பகுதிகளில் வடமாகாண உதைபந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய இவர் இக் காலப்பகுதிகளில் வடமாகாண உதைபந்தாட்ட அணி தேசிய ரீதியில் பல வெற்றிகளைப் பெறுவதற்கு பல சிறப்பான பயிற்சிகளை வழங்கியுள்ளார்.
2014 ம் ஆண்டு, முதற்தடவையாக இலங்கையின் முதல்தர அணிகளில் ஒன்றான அனுராதபுரம் "சொலிட்" உதைபந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட இவர் இக்கால பருவத்தில் நடைபெற்ற இலங்கையின் முதற்தர போட்டியான
"Dialog Champions League" போட்டிகளில் வடபகுதி வீரர்களை அதிகம் உள்ளடக்கிய சொலிட் கழகம் முதல் தடைவையாக கிண்ணம் வெல்லவதற்கு உறுதுணையாக கடமையாற்றினார்.
பிரிமியர் லீக் வரலாற்றில் மேற்கு அணிகளே கிண்ணம் வெல்லும் தன்மைகள் காணப்பட்ட போதும் முதற்தடவையாக "Dialog Champions League" கிண்ணத்தை வெளிப்பகுதி அணியை வெல்லச் செய்த பெருமை இவரையே சாரும்.
சர்வதேச கழகப் போட்டிகளில் சொலிட் கழகத்தை முதல்தடவையாக பிரதிநிதித்துவம் செய்ய வளிகோலிய இவர் இந்தியாவின் "முகமதானியன் வி.க" எதிராக முதல் வெற்றியை பதிவு செய்து சர்வதேச போட்டியில் அணியை வெற்றியடையச் செய்த வடக்கின் பயிற்றுவிப்பாளர் என்னும் பெருமையையும் பெற்றார்.
தனது உதைபந்தாட்ட பயிற்சிகளுடன் பயிற்றுவிப்பாளர் கற்கைகளையும் ஒருங்கே முன்னெடுத்துச் சென்ற இவர் AFC-A தரம், (Asian Football Confederation), DFC-A ஆகிய பயிற்றுனர் தரங்களைக்கொண்டதுடன் ஜேர்மனி, கங்கேரி, இந்தியா ஆகிய நாடுகளில் பயிற்றுனர் டிப்ளோமா கற்கை நெறிகளையும் பூர்த்திசெய்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ஆகியவற்றில் விளையாட்டு விஞ்ஞான அலகின் வெளிவாரி விரிவுரையாளராக கடமையாற்றும் இவர் உதைபந்தாட்ட மேம்பாடு தொடர்பான விடயங்களையும் முன்னெடுத்து சென்கின்றார்.
வடபகுதியின் உதைபந்தாட்ட வளர்ச்சியிலும், உதைபந்தாட்ட வீரர்களின் வளர்ச்சியிலும் அதிக கரிசனையுடனும் அக்கறையுடனும் செயற்படும் இவர் சர்வதேச போட்டிகளில் வடபகுதி வீரர்கள் பிரகாசிக்க வேண்டும் என்பதில் அதீத அக்கறையுடையவராக எப்பொழுதும் செயற்பட்டுவருகின்றார்.
எல்லாவற்றிற்கும் மேலாக தற்போது இலங்கை தேசிய மகளீர் உதைபந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக பதவிபெற்றுள்ள இவர் சர்வதேச போட்டிகளில் இலங்கை மகளீர் உதைபந்தாட்ட அணியை வழிநடத்தி எமது நாட்டிற்கும் நமது பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
வடக்கின் உதைபந்தாட்ட வளர்ச்சிக்குத் தன்னை அர்பணித்து வடபகுதியிலிருந்து தேசிய அணியின் பயிற்றுவிப்பாளராக உயர்வுபெற்றமைக்கும் எமது பிரதேசம் சார்பாக பெருமையடைவதுடன், எமது RBC செய்திப்பிரிவு மன்னார் சார்பாக இவரை கௌரவப்படுத்தி இவ் குடும்பம் சார்பாக பெருமையடைகின்றோம்.
Post a Comment